Wednesday, August 20, 2008

தொட்டதெற்கெல்லாம் மாத்திரை'யால் பேராபத்து : ஆய்வு
கொஞ்சமாக தலைவலிக்கிறதா? இலேசாக காய்ச்சல் அடிக்கிறதா? உடம்பு இலேசாக வலிக்கிறதா..? இப்படி சின்ன சின்பிரச்சனைகளுக்குக் கூட அவ்வப்போது மாத்திரை விழுங்கும் நபர்களை, மருத்துவ ஆய்வு ஒன்று கடுமையாக எச்சரிக்கிறது.

குறிப்பிட்ட நோய்களை குணமாக்கும் ஆன்டிபயோட்டிக்ஸை அடிக்கடி எடுத்துக் கொள்வதால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்கிறது, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மேற்கொண்ட ஆய்வு.

இந்த ஆய்வில், வெவ்வேறு நோய்களுக்கு ஆன்டிபயோடிக்ஸ் மாத்திரைகளை எடுத்துக் கொண்டவர்களில், 15 பேர் 'டயேரியா'வால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகை நோய், ஆன்டிபயோடிக்ஸ் சார்ந்த டயேரியா என அழைக்கப்படுகிறது.

இந்த நோய்க்கு காரணமான 'குலோஸ்டிரியம் டிஃபிசில்' என்ற குறிப்பிட்ட பாக்டீரியாவால், சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படக் கூடும் என்று இந்த ஆய்வை மேற்பார்வையிட்டவரும், எய்ம்ஸ்சின் மைக்ரோ - பயாலஜி துறையின் பேராசிரியருமான ரமா சவுத்தரி கூறியுள்ளார்.

இத்தகையை பாதிப்புக்கு ஆளானோருக்கு உரிய முறையில் பரிசோதனைகள் செய்து, உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வகையான டயேரியாவால், புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள், வயோதிகர்கள் போன்ற நோய் எதிர்ப்புத் திறன் குறைவானவர்களுக்கு பேராபத்து விளையக்கூடும் என்றும், இதில் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளான நோயாளிகளும் அடங்குவர் என்றும் மருத்துவ பேராசிரியர் ரமா தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)

No comments: