Tuesday, November 4, 2008

தூக்கம் கெட்டு வேலை செய்கிறீர்களா?
- டாக்டர் டி. காமராஜ் / தொகுப்பு: பாலா
ஐ.டி. துறை பணியாளர்களுக்கு ஏற்படும் மனநலக் குறைபாடுகளில் முக்கியமானது தூக்கமின்மையும் ஒன்று.

இரவில் பணி புரிந்து அதிகாலையில் வீடு திரும்புகின்றனர் ஐ.டி. பணியாளர்கள். ஆரம்பத்தில் எந்த பாதிப்பும் தெரியாது. 2 ஆண்டுகளுக்கு பிறகே தூக்கப் பிரச்சனை ஏற்படுகிறது.

கம்யூட்டரை பார்த்தபடி வேலை செய்துவிட்டு, வீட்டில் படுக்கச் செல்லும்போது கண்களை மூடினால், அதன் ஒளி வெள்ளம் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். இதனால் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு போராடுகிறார்கள்.

தூங்காமல் இருந்தால் என்ன?

உடல் புத்துணர்ச்சிக்கு ஆழ்நிலை தூக்கம் அவசியம். தூக்கம் இல்லையென்றால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காது. அசதி, சோர்வு உண்டாகும். தொடர்ச்சியாக தூக்கம் இல்லையென்றால் ஆத்திரம், கோபம் கூட வரும்.

தூக்கம் கெட்டு, பிறகு தூங்குவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.இது கூடுதல் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.

சிலருக்கு மனநிலையில் பாதிப்பு உண்டாகலாம். தூக்கம் கெட்டதால் உணவு சாப்பிடும் அளவு குறைந்து, உடல் நிலையும் பாதிக்கப்படலாம்.

நிவாரணங்கள்:

ஒவ்வொரு மனிதனுக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்.இரவுத் தூக்கத்தை இழக்கும் ஐ.டி. துறை பணியாளர்கள், பணியில் இருந்து வந்ததும் நேரடியாகத் தூங்க முயற்சிக்காமல், வேறு வேலையைச் செய்து கவனத்தை திசை திருப்பலாம்.

கம்ப்யூட்டரில் வேலை பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்ததும் டி.வி. பார்த்துக் கொண்டே சாப்பிடுவது சிலரின் பழக்கம்.கம்யூட்டரைப் பார்ப்பதும், டி.வி. பார்ப்பதும் கண்களுக்கு ஒரே விதமான பாதிப்பைத் தான் ஏற்படுத்தும்.

உறங்கப் போவதற்கு முன் போதிய அளவு சாப்பிட வேண்டும்.வெறும் வயிற்றுடன் இருந்தால் கூட சரியாக தூக்கம் வராது.சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்குப்பின் தூங்கப் போவது நல்லது.

தூங்கச் செல்லும் முன் மிதமான சூட்டில் பால் அருந்தலாம். உடலை வருத்தாமல் தூக்கம் இயல்பாக வர வேண்டும்ம். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவது ஆபத்து. உங்களுக்கு தூக்கத்தில் தொடர்ந்து பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தான் நமது இத்தனை உழைப்பும் என்பதை மனதில் கொண்டு, நிம்மதியாக தூங்கப் பழகுங்கள்.

(மூலம் - வெப்துனியா)

No comments: